இன்று ஆசிரியர் தினம். கல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.
நீங்கள் இன்று உங்களுக்கு கற்பித்த ஆசிரியர்களை நினைவு கூற விரும்புவீர்களாயின் உங்கள் பொன்னான நேரத்தில் ஒரு சில நிமிடங்கள் உங்கள் இதை படிக்க செலவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இக்கவிதை முரளிதரன் என்ற ஆசிரியரால், ஒரு ஆசிரியர் தின விழாவில் என்னால் வாசிக்கப்பட்ட கவிதை.
ஒரு உண்மையான ஆசிரியர் தன் பணியை இப்படியும் நேசிப்பாரோ?
ஆயிரம் ஆண்டுகள் ஆயிரம் பிறவிகள்
பூமியில் பிறந்திட விரும்புகின்றேன்.
அத்தனை பிறப்பிலும் ஆசான் பணியை
ஏற்றிட விரும்புகிறேன் .
மூங்கில் காட்டில் புல்லாங்குழலை தேடும் வேலை இது
முழுதாய் பாறையில் சிற்பம் செதுக்கும் முக்கிய வேலை இது
மனிதம் வாழ அறிவைத் தந்திடும் மகத்துவ வேலை இது
புனிதர்பலரும் போற்றிச் சொன்ன புண்ணிய வேலை இது
அதனால் அடுத்த பிறவிகள் பலவும் எடுத்து வந்தாலும்
அத்தனை பிறப்பிலும் ஆசிரியராக இருந்திட விரும்புகின்றேன்.
சித்திரம் வரைந்து வண்ணம் தீட்டும் சீரிய பணியிதுவாம்
நித்திரை மறந்து நித்தியம் செய்ய விரும்பும் பணியிதுவாம்
சொத்துக்கள் சேர்த்து வாழ நினைப்பவர் விரும்பாப் பணியிதுவாம்
முத்துக்கள் தேடி ஆழ்கடல் நீரில் மூழ்கிடும் அரிய பணியிதுவாம்
எத்தனை ஆண்டுகள் எத்தனை பிறவிகள் எடுத்து வந்தாலும்
அத்தனை பிறப்பிலும் ஆசான் பணியை ஏற்றிட விரும்புகின்றேன்.
ஐந்தும் மூன்றும் அடுக்காய் இருந்தால் சமைப்பது கடினமல்ல
இருப்பதை வைத்து அறுசுவை உணவு படைப்பது சுலபமல்ல
படிப்பறிவில்லா பாமர மக்கள் கல்வியை பெற்றிடவும்
அடிப்படை கல்வி அனைவர்க்கும் என்ற நோக்கம் வென்றிடவும்
ஆசான் அதிகம் உழைத்திட வேண்டும் என்பதை உணர்கின்றேன்
அயரா உழைப்புடன் உறுதி கொண்டப்பணி தொடர்ந்திட
விரும்புகின்றேன்
ஈன்ற குழந்தை 'அம்மா" என்றால் அன்னை மகிழ்ந்திடுவாள்
சான்றோனாகி சரித்திரம் படைத்தால் தந்தையும் மகிழ்ந்திடுவார்
சான்றோன் ஆனதன் காரணம் எந்தன் ஆசான் என்றுரைத்தால்
ஈன்றாள், தந்தை இருவரை விடவும் ஆசான் மகிழ்ந்திடுவார்
அந்தப் பெருமை எனக்கும் கூட கிடைத்திட விரும்புகின்றேன்.
அடுத்த பிறப்பிலும் ஆசானாக இருந்திட விரும்புகின்றேன்.
ஆடை அழகாய் அமைவதில்தானே தைப்போர் திறனை அறிவதுண்டு
ஓடை நீரின் நிலத்தின் தன்மை நிலத்தால்தானே திரிவதுண்டு
கூடையில் உள்ள பூவின் வாசம் கூடைக்கும் கூட வருவதுண்டு
மேடையில் உள்ளோர் புகழில் அவரவர் குருவுக்கும் கூட பங்கு உண்டு
எனக்கும் அதுபோல்கொஞ்சம் பங்கு இருந்திட நினைக்கின்றேன்
அதனைப் பெறவே ஆசான் பணியை நானும் விரும்புகின்றேன்
பழுத்த பழங்கள் நிறைந்த மரத்தை பறவைகள் தேடிவரும்
இனித்த கரும்பை கடித்து சுவைக்க எறும்புகள் ஓடிவரும்
படித்த ஞானம் நிறைந்த குருவை மாணவர் சூழ்ந்திடுவார்
நிலைத்த புகழை நிச்சயம் பெற்று நித்தியம் வாழ்ந்திடுவார்
அத்தகு புகழும் சிறிதே எனக்கு கிடைத்திட வேண்டுகின்றேன்
இத்தரை மீதில் ஆசிரியர்பணியை அதனால் விரும்புகின்றேன்.
தீயில் சுடாத தங்கம் என்றும் அணிகலன் ஆவதில்லை
அழுத்தித் துவைக்காத் துணிகள் என்றும் வெளுப்பும் அடைவதில்லை
ஆலையில் கரும்பைப் பிழிந்தெடுக்காமல் சர்க்கரை கிடைப்பதில்லை
கல்விச்சாலையில் மாணவர் பயிற்சி பெறாமல் சான்றோர் ஆவதில்லை
சான்றோன் ஆக்கும் பணியில் நானும் சாதனை படைத்திடவே
ஆசான் பணியே அடுத்த பிறப்பிலும் செய்திட விரும்புகின்றேன்
ஆதியில் வாழ்ந்த மனிதர்களிடத்தில் சாதிகள் இருந்ததில்லை
பாதியில் வந்து பாதகம் செய்தது இதுபோல் எதுவுமில்லை
சாதம் உண்டு சோம்பித் திரிந்தவர் செய்திட்ட பேதமன்றோ
பேதம் மறைந்திட கல்வியைத் தருவது ஆசான் திறனன்றோ
அந்தத் திறனை நானும் பெற்றிட மனதில் நினைக்கின்றேன்
அடுத்த பிறப்பிலும் ஆசான் பணியே தொடர்ந்திட விரும்புகின்றேன்.
முன்னோர் வகுத்த நெறிமுறை அடுத்த தலைமுறை உணர்த்திடவும்
பின்னோர் அதனை மறந்துவிடாமல் போற்றிக் காத்திடவும்
வன்முறை என்பதை அறியாத் தலைமுறை உருவாக்கி வைத்திடவும்
நன்முறை மட்டும் நாடும் இளைஞர்கள் நிறைந்து பெருகிடவும்
என்னாலியன்ற பணியினைச் செய்து என்றும் உழைத்திடுவேன்.
அடுத்தபிறவி எடுத்து வந்தாவது என் பணி முடித்திடுவேன்.
சேவை செய்து குருவுடன் வசித்து கற்றது பழைய கதையாகும்
தேவை அறிந்து கற்றலில் செயல்வழி புகுத்திடல் புதிய முறையாகும்
மாற்றம் என்பது மானிட இனத்தின் மாறா இயல்பாகும்
ஏற்றம் பெற்றிட இதனை உணர்வது ஆசான் கடனாகும்
ஆயிரம் ஆண்டுகள் ஆயிரம் பிறவிகள் எடுத்திட விரும்புகின்றேன்.
அத்தனை பிறப்பிலும் ஆசான் பணியைப் போற்றிட விரும்புகின்றேன்.
என்னிடம் கற்றவர் என்னை மதித்திட மறந்து போனாலும்
ஏற்றிய ஏணியை எட்டி உதைத்து தள்ளிட நினைத்தாலும்
ஏழை ஆசான் என்றனை எண்ணி ஏளனம் செய்தாலும்
பேழையில் செல்வம் சேர்த்திட அறியா பேதை என்றாலும்
ஆவல் கொண்டே ஆசான் பணியை அகத்தில் துதித்திடுவேன்.
அந்தப் பணியே ஆயுள் முழுதும் செய்ய முனைந்திடுவேன்
சில பேர்மட்டும் ஆசான் திறனை அறிந்து போற்றிடுவார்
சிலபேர் சேர்ந்து ஆசான்களையே பலமாய் தூற்றிடுவார்
தூற்றல் போற்றல் இரண்டையும் சமமாய் தூர வைத்திடுவோம்
ஆற்றும் பணியில் ஆர்வம் கொண்டே அயராதுழைத்திடுவோம்
ஆயிரம் ஆண்டுகள் ஆயிரம் பிறவிகள் எடுத்திட விரும்புகிறேன்
அத்தனை பிறப்பிலும் ஆசான்பணியை செய்திட விரும்புகின்றேன்.-
புகழ் எய்திட விரும்புகிறேன்.