Thursday, August 25, 2011
வேகம்
நான்
சாலை விதிகளை மதிக்கிறேன்...
தறிகெட்டு
ஓடும் என் மனமோ
எனக்கு முன்னே
ஓடிச் செல்கின்றது...
அவளை நோக்கியே!
(இக்குறுங் கவிதை 10 -01 - 2004 அன்று மாலைமலர் பத்திரிகையில் வெளியானது)
Labels:
கவிதை
Tuesday, August 23, 2011
செயல்படு
என்ன செய்யலாம்?
எப்படிச் செய்யலாம்?
தினமும்
நான் யோசிக்கின்றேன்...
என்ன சொல்ல?
எதுவும் செய்யாமலே
தொலைகின்றன
பொழுதுகள்...
("செயல்படு" என்கிற இக்குறுங்கவிதை 28 - 02 - 2004 அன்று மாலைமலர் பத்திரிகையில் வெளியானது.)
Labels:
கவிதை
பாசம்
ஏதேதோ கிடைத்தது...
எல்லாம்
உடனுக்குடன் தான்...
எதைக் கொண்டு
நிறைவு செய்ய?
அம்மா
இல்லாத வீட்டை!
(பாசம் என்ற தலைப்பிலான இக்குறுங்கவிதை 23 -05 -2004 அன்று தினத்தந்தியில் வெளிவந்தது.)
Labels:
கவிதை
குழந்தை
பனித்துளி
பால் மணத்தோடு
சிரிக்கின்றது...
என் நெஞ்சையள்ளும்
என் உயிர்க்கவிதையாய் ...
மடியில் என் குழந்தை!
("குழந்தை" என்கிற இக்குறுங்கவிதை 05 - 11 - 2004 அன்று முத்தாரம் பத்திரிகையில் வெளி வந்தது...)
Labels:
கவிதை
ஹைக்கூ
பிய்ந்த செருப்பு
அடையாளப்படுத்தியது...
வீட்டு வறுமையை.
விடிய விடிய
கதை பேசின...
குளத்துத் தவளைகள்.
பசித்த வயிறு
சாப்பிட மனமில்லை...
உலையில் விதைத்த நெல்.
ஒளிந்து விளையாட்டு...
தேடும் அலைகள்
வளைக்குள் நண்டு.
(குறித்த ஹைக்கூ கவிதைகள் 17 -10 -2004 அன்று தீக்கதிர் இதழில் வெளியானது)
Labels:
ஹைக்கூ
கவிஞன்
கால விளைச்சலுக்குத்
தேவையான விதைகள்
என்னிடம் உள்ளது...
ஒவ்வொரு நாளும்
கவனமாய்
நான் விதைக்கிறேன்...
என் கவிதைகளை!
("கவிஞன்" என்ற இக்கவிதை 2004 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் செம்மலர் என்ற இதழில் வெளி வந்தது...)
Labels:
கவிதை
Monday, August 22, 2011
அம்மா
உழைத்து உழைத்து
உருக்குலைந்த அம்மா
பழுதுபட்ட இயந்திரம் தான்!
இன்னமும்
இயங்கிக் கொண்டிருக்கிறாள்...
வலிகளையும் காயங்களையும்
இதயத்தில்
சுமந்து கொண்டிருக்கிறாள்...
எங்கள்
வயிற்றைக் காலியாக
விடுவதில்லை!
மந்திரம் தந்திரத்தில்
எனக்கு நம்பிக்கையில்லை...
இருந்தாலும்
மந்திரம் பலிக்குமென்றால்
என்
தாயைச் சுகமாக்குவேன்!
("அம்மா" என்ற இக்கவிதையானது 2004 ஆம் ஆண்டு ஏப்பிரலில் புதியபாரதம் இதழில் வெளியானது)
Labels:
கவிதை
Sunday, August 21, 2011
கண்ணீர் தேசம்
இலங்கையைச் சுற்றியிருப்பது
தண்ணீரல்ல...
தமிழர்களின் கண்ணீர்!
இலங்கை
ஒரு கவிழ்ந்து கிடக்கும்
வினாக்குறி!
லெமூரியா தப்ப விட்ட
இந்தியாவின் முற்றுப் புள்ளி!
இலங்கை
காடு மேடுகளில்
தமிழர்களின் ரேகைகள்!
மரம் செடி கொடிகள்
வளர்ந்து நிற்கின்றன...
தமிழர்களின் வியர்வையைக் குடித்தே!
தேயிலை காப்பியைப் பயிரிட்ட
தமிழர்கள்...
அவர்களுக்குத் தலைவலியா?
இந்திய புத்தனை வணங்கியும்
மாறவில்லை...
அவர்கள் இதயம் இரும்பு தான்!
சிங்களர்களின் ஆசையே
தமிழர்களின்
துன்பத்துக்கு காரணம்...
புத்தன் சரணம் கச்சாமி!
உங்களுக்கு ஞானம் பிறக்குமா?
சொல்லுங்கள்....
இலங்கை முழுவதும்
போதி மரங்களை நடுகின்றோம்!
புத்தன் இந்தியா வந்து
வெகு நாட்களாகி விட்டது...
இனி யாரை
வணங்கப் போகின்றீர்கள்?
நாங்கள்
காட்டை நாடாக்கினோம்...
நீங்களோ
நாட்டையே சுடுகாடாக்குகின்றீர்கள்!
நீங்கள்
பாசக்கயிறு வீசும் எமன்கள்...
பாதுகாப்பு இடங்களிலுமா...
உங்கள் உயிர் பறிப்பு வேலை!
எங்கள் சொந்த மண்ணில்
நாங்கள் அடிமைகள்...
இந்தியாவில்
நாங்கள் அகதிகள்!
எது எங்கள் தாய் நாடு?
நாற்றுக்களைப்
பிடுங்கி நடலாம்...
எங்கள் நாட்டில்
மரங்களே வேரோடு பிடுங்கப்பட்டு
வெளிநாடு போகின்றது!
ஐ.நாவுக்கு கட்டுப்படாத
காட்டுமிராண்டிகளை..
கட்டுப்படுத்துவது யார்?
மனித நேயம்
சிலுவையில் அறையப்படுகின்றது...
மரிக்கின்ற சிசுக்களிளிருந்து
உயிர்த்தெழப் போவது யார்?
வானக்கூரைப் பள்ளிக் கூடத்தில்
வேடிக்கை பார்க்கும்
எம் பிள்ளைகள்...
விழப் போவது உணவுப் பொட்டலமா?
வெடிகுண்டா?
நவீன ஹிட்லரின்
பேரினவாதம்...
வெள்ளாடுகளை வீழ்த்திவிட்டு
வீரம் பேசுவதா?
உலகத்தோரே
ஒன்று கூடுங்கள்...
இங்கே சக மனிதன்
செத்துக் கொண்டிருக்கிறான்...
இலங்கை! இலங்கை!
இங்கே யார் அவிழ்ப்பது?
தமிழனின் அடிமை விலங்கை!
("கண்ணீர் தேசம்" என்று தலைப்பிடப்பட்ட இக்கவிதையானது தமிழ்க்கலை இலக்கியப் பேரவை நங்கை நல்லூர் கிளையின் எட்டாவது படைப்பான "வளையாத நாணல்கள்" என்ற நூலின் ஏழாவது பக்கத்தில் வெளிவந்தது.)
Labels:
கவிதை
Subscribe to:
Posts (Atom)








