Thursday, September 25, 2014

9/11-க்கு முன்பே 9/11 இருந்தது! அது விவேகானந்தர் அமெரிக்காவில் நிகழ்த்தியது



புகழ்பெற்ற சிகாகோ உரையை விவேகானந்தர் நிகழ்த்தி இன்றோடு 121 ஆண்டுகள் ஆகின்றன.

செப்டம்பர் 11 அன்று அமெரிக்காவின் இரட்டைக் கட்டிடங்கள் தகர்க்கப்பட்ட பிறகு அந்தத் தேதியை அமெரிக்கப் பாணியில் 9/11 என்று குறிக்கும் எண் மிகவும் பிரபலம். பயங்கரவாதத்தின் குறியீடாகவே மாற்றப்பட்டு அமெரிக்காவைத் தாக்கியவர்களை உலகப் பொது எதிரிகளாகக் கட்டமைக்கும் பிரச்சாரம் ஊடக வலுவுடன் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

இதே நாளில், சரியாக 108 ஆண்டுகளுக்கு முன் வேறொரு தகர்ப்பும் அதே அமெரிக்காவில் நிகழ்த்தப்பட்டது. வேறொரு குறியீடும் உருவாக்கப்பட்டது. அது நடந்து இன்றோடு சரியாக 121 ஆண்டுகள் ஆகின்றன. நிகழ்த்தியவர் விவேகானந்தர். அமெரிக்காவில் சிகாகோ நகரில் உலக மதங்களின் பாராளு மன்றக் கூட்டத்தில் செப்டம்பர் 11 அன்று அவர் பேசியபோதுதான் அந்தத் ‘தகர்ப்பு’ நிகழ்ந்தது.

மிக மிகச் சுருக்கமான அந்த உரை மூலம், இந்தியாவைப் பற்றிய உலகின் பொதுப் பார்வையை விவேகானந்தர் புரட்டிப்போட்டார். பல ஆண்டுகளாக ஊறி வலுப்பட்டிருந்த அந்த எண்ணத்தைத் தகர்த்ததுதான் அந்த உரையின் முக்கியமான பங்களிப்பு.

“உலகத்தின் மிகப் பழமை வாய்ந்த துறவியர் பரம்பரையின் பெயரால் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். அனைத்து மதங்களின அன்னையின் பெயரால் நன்றி கூறுகிறேன். பல்வேறு இனங்களையும் பிரிவுகளையும் சார்ந்த கோடிக் கணக்கான இந்துப் பெருமக்களின் பெயரால் நன்றி கூறுகிறேன்” என்ற கம்பீரமான அறிவிப்பு அங்கிருந்த அறிஞர்களைப் பிரமிக்கவைத்தது.

பிற சமயக் கொள்கைகளை மதிப்பதில் இந்து மதத்தின் தன்மையைப் பற்றிப் பேசிய விவேகானந்தர் அனைத்து நாடுகளாலும் அனைத்து மதங்களாலும் கொடுமைப்படுத்தப்பட்டு விரட்டி அடிக்கப்பட்டவர்களுக்கு இந்தியா புகலிடம் அளித்த வரலாற்றையும் நினைவுகூர்ந்தார்.

“இன்று காலையில் இந்தப் பேரவையின் ஆரம்பத்தைக் குறிப்பிட முழங்கிய மணி, மதவெறிக்கும், வாளாலும் பேனாவாலும் நடைபெறுகின்ற கொடுமைகளுக்கும், இரக்கமற்ற உணர்ச்சிகளுக்கும் சாவு மணியாகும் என்று நான் திடமாக நம்புகிறேன்” என்ற விவேகானந்தரின் கூற்று அந்தச் சபையின் பிரகடனமாகவே ஒலித்தது.

அடிமைகளின் தேசமாகவும் கூட்டாஞ்சோறு பண்பாடாகவும் பிற்போக்குத்தனங்களின் பூமியாகவும் உலகின் பொதுப்புத்தியில் உறைந்திருந்த இந்தியாவின் பிம்பத்தை விவேகானந்தரின் இந்தச் சில நிமிட உரை உடைத்தது. “மதங்களின் தாயாகிய இந்தியாவிலிருந்து காவியுடை அணிந்து வந்த துறவி சுவாமி விவேகானந்தர் பார்வையாளர்கள் மேல் ஓர் அற்புதமான தாக்கத்தை ஏற்படுத்தினார்” என்று அந்த அரங்கின் தலைவர் ஜான் ஹென்றி பாரோஸ் வர்ணித்தார். இந்தியாவிலிருந்து புயல்போல் வந்த துறவி என்று சில நாளேடுகள் வர்ணித்தன. “விவேகானந்தர்தான் இந்தப் பாராளு மன்றத்தின் மிகப் பெரும்புள்ளி” என்றது நியூயார்க் ஹெரால்டு பத்திரிகை.

சிகாகோ உரை மூலம் உலகின் பாராட்டுகளைப் பெற்று இந்தியர்களுக்குப் பெருமித உணர்வை ஏற்படுத்திய விவேகானந்தர், இந்தியாவுக்கு வந்ததும் இந்தியர்களுக்குத் தாலாட்டுப் பாட வில்லை. இந்தியாவின் நடப்பு நிலை எவ்வளவு கேவலமாக இருக்கிறது என்பதைக் கூர்மையான சொற்களால் சுட்டிக்காட்டினார். தீண்டாமை, சாதிப் பற்று, மூட நம்பிக்கைகள், பிற்போக்குத்தனங்கள் ஆகியவற்றை ஈவிரக்கமின்றிச் சாடினார்.

ஆதிக்கச் சாதியினர் கூட்டணி போட்டுக்கொண்டு இந்தியாவின் பெருவாரியான மக்களைக் கேவலமான நிலையில் வைத்திருப்பதை வரலாற்று ஆதாரங்களோடு அம்பலப்படுத்தினார். இந்தியாவின் ஆன்மாவை அதன் வெகு மக்களின் எழுச்சியின் மூலம் மீட்டெடுக்க வேண்டும் என்று முழங்கினார். இப்படி ஒரு மனிதர் தார்மிக ஆவேசத்துடன், பொறுக்கியெடுத்த வார்த்தைகளால் தங்களை வறுத்தெடுப்பதை இந்தியப் பொதுச் சமூகம் ஏற்றுக்கொண்டது. உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை நிலைநாட்டிய இந்தத் துறவிக்கு இல்லாத உரிமையா என்று இந்திய மனசாட்சி அவரைத் தனது வழிகாட்டியாக வரித்துக்கொண்டது.

விவேகானந்தர் ஒரு தனிநபர் இயக்கமாகச் சுதந்திர உணர்வு பரவுவதற்கும் பல்வேறு சீர்திருத்தங்களுக்கும் வித்திட்டார் என்றும்கூடச் சொல்லலாம். இதற்கான ஆதார வலுவை அவருக்குத் தந்தது சிகாகோ சொற்பொழிவு. அவ்வகையில் 9/11 இந்திய வரலாற்றில் ஒரு தகர்ப்பாகவும் திருப்புமுனைக்கான குறியீடாகவும் அமைந்துவிட்டது.

- அரவிந்தன்
நன்றி: தமிழ் இந்து 

Thursday, September 11, 2014

இயற்கையை ரசியுங்கள் - பாரதியார் நினைவு நாள் செப்.11



கரிய நிறமான காகம் கா... கா... என்று கத்தும்.
மரக்கிளைகளில், வானவெளியில், அதிகாலைப் பொழுதினில்
காகம் தன் கூட்டத்தாரோடு சேர்ந்தே திரியும்.

நாலாபுறமும் சுதந்திரமாய் பறந்து செல்லும்.
தேவி பராசக்தி விண்ணில் செம்மையான கிரணங்களை
காட்டி சூரியனாய் வந்து உதிப்பாள்.

தென்னை மரக்கிளையில் அமர்ந்திருக்கும் பச்சைக்கிளி
கீச்சுக் குரலில் பாடித் திரியும்.

சின்னஞ்சிறு குருவி விண்ணில் வட்டமடித்திடும்.
பருந்து மெல்ல வட்டமிட்டவாறே நெடுந்தொலைவு சென்று பறக்கும்.
தெருவில் இரை தேடித் திரியும் சேவல் ‘சக்திவேல்' என்று கூவித் திரியும்.

செம்மை ஒளி வீசிப் பகலை வெளிச்சமாக்கிய கதிரவன்
மாலையில் மறைந்துவிடும்.

மயக்கும் மாலை வேளையில் நிலவு தன்
அமுதக் கிரணங்களைப் பொழிய ஆரம்பிக்கும்.

இந்த ரம்மியமான மாலை நேரத்தில், என் அன்பிற்குரியவளும்
உச்சி மாடத்தின் மீது ஏறி வந்து கண்ணுக்கு இனிமை சேர்த்திடுவாள்.
மனமே! வானில் திகழும் மணித்திரளான நட்சத்திரக் கூட்டத்தைக்
கண்டு இன்பம் கொள்வாய்.

நிலவையும், வான் நட்சத்திரங்களையும் கண்ணால் கண்டு மனதால்
உண்டு களிப்பதைவிடவும் வேறொரு செல்வம் உலகினில் உண்டோ?

தென்னை மரக்கீற்றில் ‘சலசல' என்று சத்தமிடும் பூங்காற்றின்
மீது குதிரைச் சவாரி போல ஏறிக்கொண்டு
உலகம் சுற்றி வந்து இயற்கையின் இன்பம் காணுங்கள்.
பண்ணோடு இசைத்துப் பாடிக் களித்திருங்கள்.

Friday, September 5, 2014

ஆசிரியர் தின வாழ்த்துக் கவிதை



இன்று ஆசிரியர் தினம். கல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

நீங்கள் இன்று உங்களுக்கு கற்பித்த  ஆசிரியர்களை நினைவு கூற விரும்புவீர்களாயின் உங்கள் பொன்னான நேரத்தில் ஒரு சில நிமிடங்கள் உங்கள் இதை படிக்க செலவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இக்கவிதை முரளிதரன் என்ற ஆசிரியரால், ஒரு ஆசிரியர் தின விழாவில் என்னால் வாசிக்கப்பட்ட கவிதை.

ஒரு உண்மையான ஆசிரியர் தன் பணியை இப்படியும் நேசிப்பாரோ?

ஆயிரம் ஆண்டுகள்  ஆயிரம் பிறவிகள்
பூமியில் பிறந்திட விரும்புகின்றேன்.
அத்தனை பிறப்பிலும் ஆசான் பணியை
ஏற்றிட விரும்புகிறேன் .

மூங்கில் காட்டில் புல்லாங்குழலை தேடும் வேலை இது
முழுதாய் பாறையில் சிற்பம் செதுக்கும் முக்கிய வேலை இது
மனிதம் வாழ அறிவைத் தந்திடும் மகத்துவ வேலை இது
புனிதர்பலரும் போற்றிச் சொன்ன புண்ணிய வேலை இது

அதனால் அடுத்த பிறவிகள் பலவும் எடுத்து வந்தாலும்
அத்தனை பிறப்பிலும் ஆசிரியராக இருந்திட விரும்புகின்றேன்.    

சித்திரம் வரைந்து வண்ணம் தீட்டும் சீரிய பணியிதுவாம்
நித்திரை மறந்து நித்தியம் செய்ய  விரும்பும் பணியிதுவாம்
சொத்துக்கள் சேர்த்து வாழ நினைப்பவர் விரும்பாப்  பணியிதுவாம்
முத்துக்கள் தேடி ஆழ்கடல் நீரில்  மூழ்கிடும் அரிய பணியிதுவாம்

எத்தனை ஆண்டுகள் எத்தனை பிறவிகள் எடுத்து வந்தாலும்
அத்தனை பிறப்பிலும் ஆசான் பணியை ஏற்றிட விரும்புகின்றேன்.

ஐந்தும் மூன்றும் அடுக்காய்  இருந்தால் சமைப்பது கடினமல்ல
இருப்பதை வைத்து அறுசுவை உணவு படைப்பது சுலபமல்ல
படிப்பறிவில்லா பாமர மக்கள் கல்வியை பெற்றிடவும்
அடிப்படை கல்வி அனைவர்க்கும் என்ற நோக்கம் வென்றிடவும்

ஆசான் அதிகம் உழைத்திட வேண்டும் என்பதை உணர்கின்றேன்
அயரா உழைப்புடன் உறுதி கொண்டப்பணி தொடர்ந்திட
                                                  விரும்புகின்றேன்

ஈன்ற குழந்தை 'அம்மா" என்றால் அன்னை மகிழ்ந்திடுவாள்
சான்றோனாகி  சரித்திரம் படைத்தால் தந்தையும் மகிழ்ந்திடுவார்
சான்றோன்  ஆனதன் காரணம் எந்தன் ஆசான் என்றுரைத்தால்
ஈன்றாள், தந்தை  இருவரை விடவும் ஆசான் மகிழ்ந்திடுவார்

அந்தப் பெருமை எனக்கும் கூட கிடைத்திட விரும்புகின்றேன்.
அடுத்த பிறப்பிலும் ஆசானாக இருந்திட விரும்புகின்றேன்.    

ஆடை அழகாய் அமைவதில்தானே தைப்போர் திறனை அறிவதுண்டு
ஓடை நீரின் நிலத்தின் தன்மை நிலத்தால்தானே திரிவதுண்டு
கூடையில் உள்ள பூவின் வாசம் கூடைக்கும் கூட வருவதுண்டு
மேடையில்  உள்ளோர் புகழில் அவரவர் குருவுக்கும் கூட பங்கு உண்டு

எனக்கும்  அதுபோல்கொஞ்சம் பங்கு இருந்திட நினைக்கின்றேன்
அதனைப்  பெறவே ஆசான் பணியை நானும் விரும்புகின்றேன்

பழுத்த  பழங்கள் நிறைந்த  மரத்தை பறவைகள் தேடிவரும்
இனித்த கரும்பை கடித்து சுவைக்க எறும்புகள் ஓடிவரும்
படித்த ஞானம் நிறைந்த குருவை மாணவர் சூழ்ந்திடுவார்
நிலைத்த புகழை நிச்சயம் பெற்று நித்தியம் வாழ்ந்திடுவார்

அத்தகு  புகழும் சிறிதே எனக்கு கிடைத்திட வேண்டுகின்றேன்
இத்தரை மீதில் ஆசிரியர்பணியை அதனால் விரும்புகின்றேன்.

தீயில் சுடாத தங்கம் என்றும் அணிகலன் ஆவதில்லை
அழுத்தித் துவைக்காத் துணிகள் என்றும் வெளுப்பும் அடைவதில்லை
ஆலையில் கரும்பைப் பிழிந்தெடுக்காமல் சர்க்கரை கிடைப்பதில்லை
கல்விச்சாலையில் மாணவர் பயிற்சி பெறாமல் சான்றோர் ஆவதில்லை

சான்றோன் ஆக்கும் பணியில் நானும் சாதனை படைத்திடவே
ஆசான் பணியே அடுத்த பிறப்பிலும் செய்திட விரும்புகின்றேன்  

ஆதியில்  வாழ்ந்த மனிதர்களிடத்தில் சாதிகள் இருந்ததில்லை
பாதியில் வந்து பாதகம் செய்தது இதுபோல் எதுவுமில்லை
சாதம் உண்டு சோம்பித் திரிந்தவர் செய்திட்ட பேதமன்றோ
பேதம் மறைந்திட கல்வியைத் தருவது ஆசான் திறனன்றோ

அந்தத் திறனை நானும் பெற்றிட மனதில் நினைக்கின்றேன்
அடுத்த பிறப்பிலும் ஆசான் பணியே தொடர்ந்திட விரும்புகின்றேன்.

முன்னோர் வகுத்த நெறிமுறை அடுத்த தலைமுறை உணர்த்திடவும்
பின்னோர் அதனை மறந்துவிடாமல் போற்றிக் காத்திடவும்
வன்முறை என்பதை அறியாத் தலைமுறை உருவாக்கி வைத்திடவும்
நன்முறை மட்டும் நாடும் இளைஞர்கள் நிறைந்து பெருகிடவும்

என்னாலியன்ற பணியினைச் செய்து என்றும் உழைத்திடுவேன்.
அடுத்தபிறவி எடுத்து வந்தாவது என் பணி முடித்திடுவேன்.    

சேவை  செய்து குருவுடன் வசித்து கற்றது  பழைய கதையாகும்
தேவை அறிந்து கற்றலில் செயல்வழி புகுத்திடல் புதிய முறையாகும்
மாற்றம் என்பது மானிட இனத்தின் மாறா இயல்பாகும்
ஏற்றம் பெற்றிட இதனை உணர்வது ஆசான்  கடனாகும்

ஆயிரம் ஆண்டுகள் ஆயிரம் பிறவிகள் எடுத்திட விரும்புகின்றேன்.
அத்தனை பிறப்பிலும் ஆசான் பணியைப் போற்றிட விரும்புகின்றேன்.

என்னிடம் கற்றவர் என்னை மதித்திட மறந்து போனாலும்
ஏற்றிய ஏணியை எட்டி உதைத்து தள்ளிட நினைத்தாலும்
ஏழை ஆசான் என்றனை எண்ணி ஏளனம் செய்தாலும்
பேழையில் செல்வம் சேர்த்திட அறியா பேதை என்றாலும்

ஆவல்  கொண்டே ஆசான் பணியை அகத்தில் துதித்திடுவேன்.
அந்தப்  பணியே ஆயுள் முழுதும் செய்ய முனைந்திடுவேன்

சில  பேர்மட்டும் ஆசான் திறனை அறிந்து போற்றிடுவார்
சிலபேர்  சேர்ந்து ஆசான்களையே பலமாய் தூற்றிடுவார்
தூற்றல் போற்றல் இரண்டையும் சமமாய் தூர வைத்திடுவோம்
ஆற்றும் பணியில் ஆர்வம் கொண்டே அயராதுழைத்திடுவோம்

ஆயிரம் ஆண்டுகள் ஆயிரம் பிறவிகள் எடுத்திட விரும்புகிறேன்
அத்தனை பிறப்பிலும் ஆசான்பணியை செய்திட விரும்புகின்றேன்.-
 புகழ் எய்திட விரும்புகிறேன்.
ஆசுரா © 2008. Design by :Yanku Templates Sponsored by: Tutorial87 Commentcute