Wednesday, October 10, 2012

'என் காலத்தில் இருந்த தமிழ்ப் பேராசிரியர்கள் போல் இப்போது இல்லை’ என்கிறார் என் ஆசிரியர். உண்மையா?


பேராசிரியர் சி.இலக்குவனார் இருந்தார். பேராசிரியர்களுக்கெல்லாம் பெரும் பேராசிரியர்.

அண்ணா அமெரிக்கா சென்றபோது யேல் பல்கலைக்கழக ஆய்வாளர்களுக்கும் போப்பாண்ட வருக்கும் கொடுப்பதற்காக இலக்குவனாரின் தொல்காப்பிய மொழிபெயர்ப்பைத்தான் கொண்டு சென்றார்.

தமிழ்நாட்டில் 1965-ம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்தபோது இலக்குவனார், மதுரை தியாகராயர் கல்லூரிப் பேராசிரியர்.

போராட்டத்தை இவர்தான் தூண்டிவிட்டார் என்று கைது செய்து தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் அடைத்தது அரசு. 'இந்தி எதிர்ப்புப் போரை நிறுத்தும் விசை, மதுரைப் பேராசிரியரிடம் உள்ளது’ என்று அப்போது அண்ணாவே பகிரங்கமாக அறிவித்தார்.

தி.மு.க. ஆட்சி வந்ததும் மாநிலக் கல்லூரியில் இலக்குவனாரை அமர்த்தினார் அண்ணா.

அதன் பிறகும் அமைதியாகிவிடவில்லை இலக்குவனார். அன்றைய நிதி அமைச்சர் நெடுஞ்செழியன் ஆங்கிலத்துக்கு ஆதரவாக கோவை கருத்தரங்கில் பேச 'தமிழின் நாவலரா? ஆங்கிலத்தின் காவலரா?’ என்று பகிரங்கமாக எழுந்து கேட்டவர் அவர்.

1960-களின் இறுதியிலும் 70-களின் தொடக்கத்திலும் 'பேராசிரியரின் மாணவர்’ என்று பலரும் பெருமிதத்துடன் சொல்லிக்கொள்ளும் தகுதி படைத்தவராக இலக்குவனார் இருந்தார்.

தமிழ்ப் புலமையும், துணிச்சலும் ஒருங்கே பெற்ற தமிழ்ப் பேராசிரியர்கள் குறைந்து வருவதைச் சொல்லி இருப்பார் உங்கள் ஆசிரியர்!

Saturday, September 29, 2012

மழை!



வருக! வருக! வான் மழையே!
வளம்! பெருக! வான் மழையே!
விண்ணின் பரிசு வான் மழையே!
மண்ணின் மகிழ்ச்சி வான் மழையே!

ஆறு குளம் ஏறி அழைக்கின்றதே
அடித்துப் பெய்திடு வான் மழையே!
அன்னை பூமி குளிர்ந்திடவே
ஆர்ப்பரித்துப் பெய்திடு வான் மழையே!

புல்வெளி பசுமை கண்டிடவே
புயலெனப் பொழிந்திடு வான் மழையே!
பூவுலக உயிர்கள் வாழ்ந்திடவே
புதுமையாய்ப் பொழிந்திடு வான் மழையே!

வயலில் கதிர்கள் செழித்திடவே
வள்ளலாய்ப் பொழிந்திடு வான் மழையே!
உழவர்கள் முகம் மலர்ந்திடவே
உண்மையாய்ப் பொழிந்திடு வான் மழையே!

(இகவிதையானது 21 ஆம் திகதி நவம்பர் மாதம் 2004 ஆம் ஆண்டு தீக்கதிர் இதழில் வெளியானது)

Friday, June 8, 2012

தாம்பத்தியம்!



கணவன்
மனைவிக்குள் 
பகலெல்லாம்
ஓயாத சண்டை...

பல மணி நேரமாய்
சமாதானம் 
வரவில்லை!

சங்கடமே
நிலைத்து நின்றது
இரவில்
ஊடலை
தீர்த்து வைக்கும்
வீட்டு நீதிபதியை
கட்டில்!

(இக்கவிதை 22 ஆம் திகதி பெப்ரவரி மாதம் 2004 ஆம் ஆண்டு ராணி இதழில் வெளியானது)

Tuesday, May 22, 2012

வாழ்க்கை!



முள்ளில் கிழிபடுகின்றது
கல்லில் இடிபடுகின்றது...

மலையிலிருந்து
அருவியாய் குதித்து
மகிழ்ச்சியாய்
நடையிடுகின்றது ஆறு!

(இக்கவிதை 2004 ஜனவரியில் செம்பருத்தி இதழில் வெளியானது)

Wednesday, April 11, 2012

தடை நீங்குமா?



நாங்கள் தெருக்களில் 
நுழையவும் தடை!

எங்கள் கால்கள்
தீண்டிய செந்நெல்...

அவர்கள்
களஞ்சியங்களில்
பத்திரமாய்!

(இக்கவிதை 2004 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி முத்தாரம் இதழில் வெளியானது.)

Thursday, March 22, 2012

தேர்தல்!

தேர்தல் நல்ல தேர்தல் தெளிதல்
தேறுதல் வேண்டின் நாடித் தேர்தல்
சோர்தல் இன்றி வாக்கு அளிக்க
ஆறுதல் நமக்கு தேர்தல் தருமே.

 (2004 மே அன்று செம்பருத்தி இதழில் இக்கவிதை வெளியானது) 

குறும்பு!


அடிக்க மனமில்லை
பார்த்து இரசித்தேன்...
புதுச் சட்டையில்
மகள் பதித்த கறை!

(இக்கவிதை 25 -07 -2004 அன்று தினத்தந்தியில் வெளியானது)

Friday, January 13, 2012

நானும் என் கவிதைகளும்...!!

நான் 
என் கவிதைகளை 
அதிகமாய் நேசிக்கின்றேன்...
என் கவிதைகளுக்குள்
நானே இருக்கின்றேன்...

வார்த்தைகள்
என் தோழர்கள்
நான் அழைக்காமலே
என்னைத் தேடி வருகின்றனர்...
என் தேவையறிந்தே!

என் கவிதைகளில்
சில உரக்கச் சிரிக்கும்...
மகிழ்ச்சி
பொங்கப் பொங்க
ஆனந்தம் ஊற்றெடுக்கும்...

நான் அழும் போதெல்லாம்
சொற்கள்
எனக்கு ஆறுதல் சொல்லும்...
என்னைத் தேற்றும் வரை
அவைகள் ஓய்வதில்லை...

நான்
எனக்குள் அரசாங்கம்..
என் கவிதைகளே
என் படைக் கலன்கள்..
என்னை வெல்வார் யார்?

நான் தோல்வியில் 
துவளும் போதெல்லாம்...
வெற்றியின்
முகவரியைத் தரும்...
கவிதை முயற்சி தரும்...

என் கவிதைகளில் 
மனிதத்தை 
நிரப்பி வைத்திருக்கிறேன்..
பணம் பார்ப்பதில்லை...
மனம் பார்க்கிறேன்...

எழுதி என்ன கிழிக்கிறாய்?
கேள்விக் கணைகள் வருகின்றன..
உள்ளங்களைக் கிழித்து
உண்மைகளைக்
கவிதைகள்  ஊன்றுகின்றனவே! 

என்னைப் பிடிக்காத போது
பலர்
முகத்தை திருப்பிக்கின்றனர்...
என் முகம் நோக்கும்
குழந்தையாய்க் கவிதை!

சிறு துளியாய் 
'நானும்
இருந்து விட்டுப் போனேன்'
உலகில் அடையாளமாய்
என் கவிதைகள்!

(இக்கவிதையானது 2004 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்  "ஆத்மா உலகம்" எனும் இதழில் வெளிவந்தது...)

ஆசுரா © 2008. Design by :Yanku Templates Sponsored by: Tutorial87 Commentcute